Nobel Prizes 2013 | The Nobel Prize in Literature 2013 | நோபல் பரிசு 2013 : இலக்கியம்

கடந்த சில ஆண்டுகளாக நோபல் பரிசு வாங்கக் கூடியவர்கள் எனும் யூகப் பட்டியலில் இடம்பெற்றுவந்த அலைஸ் மன்றோ, தற்போது நோபல் பரிசு வாங்கியவர் களின் பட்டியலுக்கு இடம் மாறிவிட்டார். இங்கிலாந்தின் சிறப்பு மிக்க "கவர்னர்' விருதும், கனடாவின் உயரிய இலக்கிய விருதான "புக்கர்' விருது பெற்ற உலகின் சிறந்த பெண் எழுத்தாளர்.

2013-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசாளர் என்பதையும் தாண்டி, கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்ட அலைஸ் மன்றோவுக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு பெறும் கனடா தேசத்து முதல் பெண் எழுத்தாளர் என்பது ஒன்று. அடுத்தது சிறுகதைப் பிரிவில் நோபல் பரிசு வென்ற முதல் எழுத்தாளர்.

ஜூலை 10, 1931-இல் கனடாவின் ஆன்டோரியா மாகாணம் வின்காமில் பிறந்தவர் அலைஸ். தந்தை ராபர்ட் எரிக், நரி மற்றும் கீரிப் பண்ணை உரிமையாளர். தாய் அன்னி கிளார்க் பள்ளி ஆசிரியை.

வெஸ்டர்ன் ஆன்டோரியே பல்கலைக்கழகத்தில் பத்திரிகையியல் (ஓர்ன்ழ்ய்ஹப்ண்ள்ம்) படிக்க வந்த அலைஸ், படிப்பை முடிக்கும் முன்னே அங்கே அறிமுகமான ஜேம்ஸ் மன்றோவை திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் வான்கோவருக்கு இடம்பெயர்ந்த அலைஸ், 1963-இல் பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியான விக்டோரியாவுக்கு மாறியபோது, கணவருடன் சேர்ந்து, "மன்றோ புக்ஸ்' கடையைத் தொடங்கினார். அது இன்றளவும் இயங்கி வருகிறது. ஆனால் ஜேம்ஸ் - மன்றோ திருமண வாழ்வு 1972-இல் முற்றுப்புள்ளியைச் சந்தித்தது. எனினும், அலைஸ் விரைவிலேயே தனக்கு அறிமுகமான ஜெரால்டு ஃப்ரெம்லுனை திருமணம் செய்துகொண்டார்.

தனது இளம்வயதிலேயே அலைஸ் சிறுகதைகள் எழுதத்தொடங்கிவிட்டார். அவரது சிறுகதைகள் 1950- களிலேயே பல்வேறு பத்திரிகைகளில் இடம்பெறத் தொடங்கின. அச்சில் வெளிவந்த அலைஸின் முதல் சிறுகதை "நிழல்களின் பரிமாணங்கள்' (The Dimensions of  Shadows).. அவரது முதல் சிறுகதைத் தொகுதியான "ஆனந்த நிழல்களின் நடனம்'  (Dance of Happy Shades) 1968-இல் வெளியாகி, கனடாவில் பரவலான கவனத்தைப் பெற்றது.

மன்றோவின் கதைமொழி நேர்த்தியானது. நாவல்கள் எழுதியுள்ளபோதும், சிறுகதைகளே இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன. விமர்சகர்கள்  இவரை கனடாவின் "செக்காவ்' என பாராட்டுகிறார்கள். மன்றோவின் பெரும்பாலான கதைகள் சிறுநகரப் பின்னணியில் அமைந்தவை. சமூக அங்கீகாரத்துக்கான ஏக்கமும், அதனால் அமையும் விரும்பாத உறவுகளும், ஒழுக்க மீறல்களும், தலைமுறை இடைவெளியில் எழும் பிரச்சினைகளும் வாழ்க்கை லட்சியங்களின் மோதல்களும் இவரது பெரும்பாலான கதைகளின் மைய கருவாக அமைபவை.

புகழ்பெற்ற படைப்புகள்

Who Do you Think you Are? The Moons of Jupiter, Runaway, The view from Castle Rock, Too much Happiness போன்ற இவரின் படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. Dear Life (2012) இவரது சமீபத்திய படைப்பாகும்.

இவரது கதையைத் தழுவி தொலைக்காட்சியில் நிறைய கதைபடங்கள் வெளிவந்திருக்கின்றன. சாரா போலி இயக்கிய அவளிடமிருந்து தூரத்தில் (Away from her) திரைப்படம் மற்றும் 1984-இல் குறும் படத்துக்கான ஆஸ்கார் விருது வென்ற பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்  (Boys And Girls)  குறும்படம் இவற்றின் மூலக்கதை அலைஸ் மன்றோவினுடையது ஆகும்.

மன்றோவின் சிறுகதைகள் நாவல்களுக்கான இலக்கிய அடர்த்தியைக் கொண்டவை என விமர்சனங் களால் பாராட்டப்படுகின்றன. அலைஸின் படைப்புகள் இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 2005-இல் "டைம்' பத்திரிகை பெரிதும் செல்வாக்கு வாய்ந்த  100 நபர்களின் பட்டியலைத் தயாரித்தது. அதில் அலைஸ் மன்றோவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. நோபல் பரிசை வென்ற பிறகு அலைஸின் புகழ் வெளிச்சம் இன்னும் நூறு வாட்ஸ் அதிகரித்திருக்கிறது. பாவம் அலைஸ், 82 வயதில் இன்னும் முப்பது நாற்பது  நேர்காணல்களுக்காவது தன்னை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டியிருக்கும்!  

Comments