Nobel Prizes 2013 | The Nobel Prize in Economics 2013 | நோபல் பரிசு 2013 : பொருளாதாரம்

பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு (Nobel Memorial Prize in Economic Sciences) பொருளியலில் பிரிவில் சீர்மிகு பங்களிப்புகளை அளித்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது முக்கியமான விருதாகும். இதன் அலுவல்முறையிலான பெயர் சுவிரிஜெஸ் வங்கியின் பொருளியலுக்கான நோபல் நினைவு பரிசு  (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel). நோபல் பரிசு வழங்கப்படுவதற்கு காரணமான விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல், தனது  உயிலிலில் பொருளாதாரத்துறையைப் பற்றி குறிப்பிடவில்லை. ஆரம்ப காலத்தில் நோபல் பரிசுக்குழுவும் அந்தத்  துறைக்கு பரிசு வழங்கியதில்லை. இருப்பினும் பொதுவாக  நோபல் பரிசுடனேயே அடையாளப்படுத்தப்ப டுகிறது.

பொருளியல் பரிசு என்று நோபல் நிறுவனத்தால் குறிப்பிடப்படும் இது, 1968-ம் ஆண்டு சுவீடனின் மத்திய வங்கி, தனது 300-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இப்பரிசை அளிக்கும்படி நோபல் தேர்வுக் குழுவைக் கேட்டுக்கொண்டது. பரிசுத் தொகையையும் அந்த வங்கியே அளித்து வருகிறது. 1969-ஆம் முதல் பொருளாதாரத்துக்கான பரிசு வழங்கப் படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல் போன்றே இந்தப் பரிசினைப் பெறுவோரையும் சுவீடனின் அறிவியலுக்கான அரசு அகாடமி தேர்ந்தெடுக்கிறது. 1969-ஆம் ஆண்டு முதன்முதலாக இந்தப் பரிசு டச்சு மற்றும் நார்வீஜிய பொருளியலாளர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் பிரிஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

2013-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர்கள் லார்ஸ் பீட்டர் ஹான்சென், யூஜின் ஃபாமா, ராபர்ட் ஜெ. ஷில்லர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துகளுக்கான சந்தை மதிப்பு நிலவரத்தை அறிந்துகொள்வது பற்றி இவர்கள் மேற்கொண்ட ஆய்வுக்காக, இந்த உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபாமாவும், ஹான்செனும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக உள்ளனர். கனெக்டிக்கட் மாகாணத்தில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஷில்லர் பேராசிரியராக உள்ளார்.

ஏற்ற இறக்கத்துடன் இடர் (ரிஸ்க்) அதிகமாகவும், பாரபட்சமான அணுகுமுறையும் உள்ள சந்தையில் சொத்து விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக தங்கள் ஆய்வின் மூலம் முக்கியப் பங்களிப்பை மூவரும் செய்துள்ளனர் என்று  நோபல் பரிசுக்கான தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

பொருளாதாரத் துறைக்கான பரிசை வென்றவர்களில் அமெரிக்கர்களே அதிகம். கடந்த 10 ஆண்டுகளில் இப்பரிசை பெற்ற 20 பேரில் 17 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 2012-ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக் கான நோபல் பரிசை அமெரிக்கா வைச் சேர்ந்த ஆல்வின் ராத், லியாட் ஷெப்லே ஆகியோர் வென்றனர்.

நிதிச் சந்தையைத்தான் ஃபாமாவும் ஷில்லரும் ஆராய்ந் தார்கள். ஆனால், இருவரும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தனர். அவர் களுடைய கருத்து வேறுபாடுகள் சாதாரணமானவை  அல்ல. முதலீட்டு உத்தி, நிதிக் கட்டுப்பாடு, பொருளாதாரக் கொள்கை என்ற அனைத்துமே இவ்விருவரின் கருத்துகளுக்கும் உட்பட்டே தீர்மானிக்கப்பட வேண்டிய அம்சங்களாக இருக்கின்றன.

உதாரணத்துக்கு, ஷில்லரின் வழியைப் பின்பற்றுவதாக இருந்தால், வீடு கட்டுவதில் உடனே ஈடுபடாமல் சிறிது காலம் காத்திருந்து - விலை குறைவாக இருக்கும்போது - கட்டியோ, வாங்கியோ பயன் அடையலாம். ஆனால், அவரைப் போல சரியாகக் கணிப்பவர்கள் யார்?  அவராலேயே எல்லா காலத்திலும் சரியாகக் கணித்துவிட முடியுமா?

ஃபாமாவின் கருத்தைப் பின்பற்றுவதாக இருந்தால், சந்தையில் வீடு அல்லது வீட்டுமனையின் விலை என்பது அரசின் கொள்கை, மக்களிடம் உள்ள பணப்புழக்கம், அவர்களுக்கு ஏற்படும் சொந்த வீட்டுக் கனவு, பங்குச் சந்தையில் வீழ்ச்சி, தங்கம் - வெள்ளி விலை உயர்வு, வீட்டு வாடகை அதிகரிப்பு, குடியிருக்க வீடு கிடைக்காத நிலைமை போன்ற பல்வேறு அம்சங்களைச் சார்ந்தது. வருமான வரி பிடித்தத்தைக் குறைத்துக்கொள்வதற்காகக் கூட வீடு கட்டவோ, வாங்கவோ நினைப்பவர்கள் பலர். எனவே, ஃபாமாவின் கருத்தையும் நிராகரித்துவிட முடியாது. சந்தைகள் நடைமுறைகளைக் கணக்கில் கொண்டு அறிவியல்பூர்வமாகச் செயல்படுபவை, வாங்கு வோருக்கும் விற்போருக்கும் இடையில் பாலமாகச் செயல் படுபவை என்கிற அடிப்படையில் ஃபாமா தெரிவித்த கோட்பாடு, பங்குச் சந்தை நிதியம் உருவாகவும் நிதிக்கட்டுப்பாடுகள் குறையவும் காரணமாக அமைந்தன. ஆனால் ஷில்லரோ, சந்தைகள் அறிவுபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதில்லை, திறமைக் குறைவாகவே செயல்படுகின்றன என்ற தரவுகளைத் தொகுத்து, ஃபாமாவைக் கடுமையாக விமர்சித்தார். பங்குச் சந்தையிலும் வீடமைப்புத் துறையிலும் சரிவு ஏற்படும் என்று முன்கூட்டியே தெரிவித்து, அப்படி வீழ்ச்சி ஏற்பட்டபோது மற்றவர்களால் 2000-த்திலும் 2006-லும் நினைவுகூரப்பட்டு பிரபலமடைந்தார். இவ்விருவருடன் விருதைப் பகிர்ந்துகொள்ளும் லார்ஸ் பீட்டர் ஹேன்சன் இவர்களுடைய பொருளாதாரக் கோட்பாடுகளைப் புள்ளிவிவர அடிப்படையில் பகுப்பாய்வு செய்து முதலீட்டுத் திட்டங்களைத் தீர்மானிக்கும் வகையில் வழிமுறையைக் கண்டுபிடித்தார். அதைத்தான் மற்ற சமூக அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.

மூன்று பொருளாதார வல்லுநர்களும் தனித் தனியாகத்தான் தங்களுடைய ஆய்வுகளை மேற்கொண்டனர். அதே சமயம் மூவரும் சேர்ந்து நிதிச் சந்தை எப்படிச் செயல்படுகிறது, பங்குகளின் விலையும் கடன் பத்திரங்களின் விலையும் எப்படி மாறுபடுகிறது என்று கண்டறிந்து தெரிவித்தனர். பங்குச் சந்தைகள் குறுகிய காலத்தில் சரியாகக் கணிக்க முடியாதபடி ஏற்ற இறக்கங்களுடன் உள்ளன. நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது எளிதாக ஊகித்துவிடும் நிலையில் இருக்கின்றன. அதாவது, திட்டமிட்ட கணக்கீடுகளும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரணிகளும் இணைந்து சந்தையின் ஏற்ற இறக்கங்களைத் தீர்மானிக்கின்றன என்று அறுதியிட்டுக் கூறியுள்ளனர்.

நிதிச் சந்தைகளின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் நடவடிக்கைகள் 1980-களில் தொடங்கின. சந்தைகள் திறமையானவை, சரியாக முடிவெடுக்கக்கூடியவை என்கிற அடிப்படையில் சந்தைகளின் மீதான கட்டுப் பாடுகள் தளர்த்தப்பட்டன. 2000-களில் வீடுகளின் விலை உயரத் தொடங்கியபோது விலைவாசி உண்மை யைப் பிரதிபலிலிப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், நிலைமை முற்றி நெருக்கடி ஏற்பட்டபோது ஷில்லரின் கோட்பாடு சரியென்று உணரப்பட்டு நிதிச் சந்தைக்குக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொருளாதார முடிவுகளுக்கு முதலீட்டாளரின் மனநிலையும் முக்கிய காரணம் என்று உணரப்பட்டது.

எதிர்காலத்தில் நடவடிக்கைகளை இதையொட்டியே மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. சில துறைகளில் எழுச்சி ஏற்பட்டுவிட்டதைப்போன்ற அடையாளங்கள் தோன்றும்போதே அவை இயற்கையா, அல்லது மற்றவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தற்காலிலிகமான செயற்கையா என்று கண்டுபிடித்துவிட முடியுமா என்று அமெரிக்க பெடரல் அரசின் நிதித் துறை அதிகாரிகள் இப்போது விவாதிக்கத் தொடங்கி விட்டனர்.

உதாரணத்துக்கு லிலிபியா மீது அமெரிக்கா போர் தொடுக்க முடிவு செய்துவிட்டது என்று செய்தி வந்தால், உடனே சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிலியத்தின் விலை உயருகிறது. இதில் பொருளாதாரம் சார்ந்த காரணம் எதுவும் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் போர்க் கப்பல்கள் நடமாட்டத்தால் எண்ணெய்க் கப்பல் களால் போய்வர முடியாது என்ற அச்சமே எண்ணெய் விலையை உயர்த்தக் காரணமாகிறது. போரே தொடங்க வில்லை என்றாலும், போர் வரலாம் என்ற செய்தியே இங்கு விலையை உயர்த்தி சந்தையைப் பரபரப்பாக்குகிறது.

Comments