Nobel Prizes 2013 | The Nobel Prize in Physics 2013 | நோபல் பரிசு 2013 : இயற்பியல்

பிரபல பத்திரிகைகளில் செய்தியாக்கப்பட்டது போல "கடவுள் துகள்' என்பது முழுப்பொய். ஏனெனில் 1993-ல் நோபல் பரிசு பெற்ற லியோன் லெடர்மேன் ஒரு புத்தகம் எழுதினார். அதில் "இவ்வளவு நாட்களாக கோடி கோடியாக செலவழித்தும் இன்னும் அகப்படமாட்டேங் கிறதே, கடவுளே அந்தத் துகளை நாசமாக்கும்' என்ற அர்த்தத்தில் கடவுள் நாசமாக்கும் துகள் (goddamn particle)  என்ற தலைப்பையும் அதற்கு வைத்தார். இந்த நாசமாக்கும் என்ற வார்த்தை அபசகுணமானது என்று பதிப்பகத்தார் கருதி நாசமாக்கும் என்ற பதத்தை எடுத்து விட்டனர். அதன் பிறகு அது கடவுள் துகள் என்றே அழைக்கப்படுகிறது. அதற்கு அறிவியல் பெயர் ஹிக்ஸ் போசான் என்பதாகும். பீட்டர் ஹிக்ஸின் பெயராலேயே அதை அழைக்கத் தொடங்கினர்.

""அறிவியல் கடவுள் கோட்பாட்டிற்கு எதிரானது,  அப்படியிருக்க இந்த பத்திரிகைகள் ஏன் ஹிக்ஸ் போசான் துகளை கடவுள் துகள் என்று அழைக்கின்றன என்பதுதான் புரியவில்லை''  பீட்டர் ஹிக்ஸ் "த கார்டியன்' (லண்டன்) நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

போசான் என்பது ஒரு வகையான துகள், மேலும் இந்தத் துகள்களின்  இயக்கத்தையும் குணங்களையும் போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியலிலின்படி (Bose- Einstein Statistics)  கணிக்கலாம். போஸான் என்பது சத்தியேந்திர நாத் போஸ் மற்றும் ஐன்ஸ்டீன் பெயரின் கடைசி வார்த்தையைக் குறிக்கும்.

இயற்பியலின் கோட்பாட்டின்படி ஒரு பொருளின் அடிப்படை அலகு அணு ஆகும். அணுக்களின் ஒருங் கிணைவுதான் மூலக்கூறு. மூலக்கூறுகளின் ஒருங் கிணைவுதான் பொருள். ஆக ஒவ்வொரு பொருளும் மூலக்கூறுகளால் ஆனது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனது. இந்த பிரபஞ்சத்தின் தொடக்க புள்ளி இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. என்றாலும் ஒரு அணு உருவாக்கத்திலிலிருந்தே இந்த பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களும் அதாவது நட்சத்திரங்கள், கோள்கள், உயிரினங்கள், மனிதர்கள் உட்பட அனைத்தும் பரிணமித்துள்ளன. 

அனைத்துப் பொருட்களின் அடிப்படையான அணு எப்படி உருவானது, எப்படி இயங்குகிறது, அணுக்கள் எப்படி சக்தியை வெளியிடுகிறது, அணுக்கள் இணைந்து எப்படி மூலக்கூறுகளை உருவாக்குகிறது என்ற தொடர் ஆராய்ச்சி தான் கடந்த நூறு வருட இயற்பியலிலின் மொத்த ஆராய்ச்சி. அணுவின் இரகசியத்தை தொடர்ந்து வெளிப்படுத்திவரும் இயற்பியல் விஞ்ஞானிகள் தான் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்று வருகின்றனர். அந்த வகையில் இந்தாண்டு இயற்பியல் பிரிவுக்கான நோபல் பரிசு பீட்டர் வேர் ஹிக்ஸ், பிரான்சுவா எங்கிலேர்ட் ஆகிய இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு ஹிக்ஸ் போசான் துகளை கண்டறிந்தாமைக்காக கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு அணுவிலும் உட்கரு ஒன்று அமைந்துள்ளது.  அந்த உட்கருவில் புரோட்டான் மற்றும்  நியூட்ரான் துகள்கள் அடங்கியுள்ளன. புரோட்டான் நேர்மின்சுமை கொண்ட துகள். நியூட்ரான் மின்சுமையற்ற துகள். அணுவின் உட்கருவை சுற்றி எலக்ட்ரான் துகள்கள் வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன. இயற்பியல் கோட்பாட்டின்படி ஒரே மின்சுமையை கொண்ட துகள்கள் ஒன்றை ஒன்று விலக்கும். எதிரெதிர் மின்சுமையுடைய துகள்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும். காந்த விசையைப் போலவே. மின் புலத்தில் காந்தவிசை செயல்படுவதால், இது மின்காந்த விசை எனப்படுகிறது. அணுவிற்குள் இருக்கும் இந்த மின்காந்த விசைதான் புரோட்டானும் எலக்ட்ரானும் இணைந்து அணுவிற்குள் இருப்பதற்கு காரணம். இதனை பிளக்கும் போது அணுவின் ஆற்றல் வெளிப்படும். இப்படிதான் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் அணு இயற்பியல் ஆராய்ச்சிகள் தெரிவித்தன. ஆனால் இன்றைய கண்டுபிடிப்புகளின்படி  ஒரு அணுவிற்குள் அணுக்கூறுகள் மிகச் சிறிய நுண் துகள்களான குவார்க்குகள் (Quarks), லெப்டான்கள் (leptons), போசான் களால் (bosons) ஆனவை என உறுதி செய்யப்பட்டுள்ளன.

நவீன ஆய்வின்படி, இந்த பிரபஞ்சம் முழுவதும் அணுக் களின் உருவாக்கத்தின் மூலம்தான் உருவானது. அணுக்கள் நுண் துகள்களால் ஆனது. இந்த பிரபஞ்சம் நுண் துகள்களால் நிரம்பியுள்ளது. இந்த நுண் துகள்கள் அனைத்தும் விசைகளாலும் விசை துகள்களாலும் ஆளப்படுகிறது. அணுவில் இந்த விசையை அணுவின் மின்காந்த விசையைப் பொறுத்து வல்விசை (strong force),  மெல்விசை  (weak force) என இரண்டாக பிரிக்கலாம். இந்த இரண்டு விசைகளை உள்ளடக்கியதே அணு.  அணுவின் இயக்கத்திற்கு காரணம் இந்த இரண்டு விதமான விசைகள் செயல்படுவதே.

முதலிலில் புலம் என்பது என்னவென்று பார்ப்போம். சாலையோரத்தில் நிறுத்திவைக்கப் பட்டிருந்த சைக்கிள் மீது லாரி மோதியதால் சைக்கிள் உடைந்தது என்பது இரண்டும் தொட்டுக் கொண்டதால் வந்த விளைவு. ஆனால் விளைவு ஏற்பட இரு பொருள்கள் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த இரு பொருள்களுக்கு இடையிலே ஏற்படும் விசையினாலும், தூரத்தில் இருக்கும் பொழுதே விளைவு ஏற்படும். உதாரணத்திற்கு காந்தங்களை எடுத்துக்கொள்வோம். காந்தங் களின் துருவங்கள் தொடவேண்டியதில்லை, ஆனால் விளைவு ஏற்படும். அவ்வாறு தொடாமலே விளைவு ஏற்படும்போது அந்தப் பொருள்கள் ஒரு புலத்தினுள் அதாவது ஒரு கட்டமைப்புக்குள் இருக்கின்றன என்று பொருள். குறிப்பாக காந்த விசை செயல்படும் பொழுது அது காந்தப்புலம் என்றழைக்கப்படுகின்றது. புலம் பெயர்ந்து விட்டால் பொருள்களுக்கிடையே விசை இருக்காது. ஆக புலத்தினுள் இருக்கும் பொருள்களிடையே எவ்வாறு விசை ஏற்படுகின்றது என்று பார்த்தால் ஏதோ ஒரு துகள் அந்தப் பொருள்களினூடாக பரிமாற்றம் செய்யப்படுகின்றது என்பது குவாண்டம் கொள்கை சொல்லும் செய்தி.

ஹிக்ஸ் போசானுக்கு வருவோம், W-,W+, Z0    போசான்கள் என்பவை குவாண்டம் துகள்கள். இவை ஹிக்ஸ் புலத்தில் தொடர்புகொண்டவை. ஹிக்ஸ்  புலமானது எலக்ட்ரான் மற்றும் குவார்க் (புரோட்டான், நியூட்ரான்) போன்ற அடிப்படைத் துகள்களுக்கு மட்டுமே நிறையை அளிக்கிறது. அணுவின் உட்கருவினுள் குவார்க்குகள் பொதிந்துள்ளன. இந்த குவார்க்குகளுக்குள் புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் அமைந்துள்ளன. அனைத்து பொருட்களின் நிறையும் இந்த புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் ஒருங் கமைவு மூலமே வெளிப்படுகிறது. குவார்க்குகளுக்குள் உள்ள நுண்ணிய அணு துகள்கள் மூலமே நிறையை பெறுகின்றன. இருந்தாலும் ஹிக்ஸ் புலம் இல்லாமல் இந்த நிறையை பெற முடியாது. பிரபஞ்சத்தையும் அறிய முடியாது. அதேசமயம் எலக்ட்ரான்கள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்யக் கூடியவை. உதாரணமாக ஃபோட்டான்கள். ஃபோட்டான்களால் அதிகப்படியான சிக்கலை உள்ளடக்கிய அணுக்களையோ மூலக்கூறு களையோ ஒருங்கிணைக்க முடியாது. இந்த ஒருங்கிணைவை ஹிக்ஸ் புலம் தான் செய்ய முடியும்.  ஆக அடிப்படையான  நுண் துகள்கள் தனக்கான  நிறையை புலத்தினுள் இடை வினையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் பெறுகின்றன. இவ்வாறு புலத்தினுள் இடை வினையை ஏற்படுத்திக் கொள்ளாத துகள்கள்  நிறையை பெறுவதில்லை. இதுவே நிலையான மாதிரி (Standard Model)  கோட்பாடாகும்.

இதில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்ன வென்றால் இந்த W-,W+, Z0 போசான்களைத் தவிர்த்து மற்றத் துகள்களுக்கு (ஃபோட்டான்கள், லெப்டான்கள், மீசான்கள், பாரியான்கள்) நிறை கிடையாது. இவை முறையே 89 மற்றும் 97 மடங்கு புரோட்டான்களின் (938 MeV) நிறையைவிட அதிகமானது. இந்த இரண்டு போசான்களுக்கும் எப்படி நிறை வந்திருக்க வேண்டும் என்று பீட்டர் ஹிக்ஸ், பிரான்சுவா எங்கிலேர்ட் ஆராயும்போது அவர்கள் மனதில் தோன்றியதுதான் இந்த ஹிக்ஸ் போசான். இந்த ஹிக்ஸ் போசான்தான் இந்த இரண்டு போசான்களுக்கும் நிறையைக் கொடுத்திருக்க வேண்டும் என்று கணித்தனர். மேலும் இந்த ஹிக்ஸ் போசானுடைய நிறை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கணித்திருந்தனர்.

அதுதான் இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி படுத்தப்பட்டிருக்கிறது. இதை இவ்வாறு கணிப்பதற்கு உதவியாக இருந்தது சமச்சீர்மை முறிவு (Symmetry Breaking) என்ற கோட்பாடு. சமச்சீர்மை என்றால் எங்கும் சீராக இருக்கும் தன்மை என்பது. எந்த ஒரு பொருளையும் திடீரென்று குளிர்வித்துவிட்டால் தன்னுடைய நிலையை மாற்றும்போது (phase transition) சமச்சீர்மை குறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, தண்ணீரை எடுத்துக் கொண்டால் தண்ணீருக்குள் இருக்கும் ஒரு துளி நீரின் வழியாக எந்தத் திசையில் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்; இது சமச்சீர்மை. இப்பொழுது அந்தத் தண்ணீரை குளிர்வித்தால் அது இறுகி கட்டியாகி விடும். கட்டியானால் சில இடங்களில் பிளவுகள் ஏற்பட்டிருக்கும்.

அதே தண்ணீரை உடனடியாகக் குளிர்வித்தால் நிறைய பிளவுகள் ஏற்பட்டிருக்கும். பிளவுகள் ஏற்பட்டு விட்டாலே சமச்சீர்மை முறிந்துவிடும். இந்த விதி தண்ணீருக்கு எப்படி பொருந்துகிறதோ அதேபோல பெருவெடிப்பில் (Big Bang)  இருந்தே குளிர்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திற்கும் பொருந்தும். பிரபஞ்சத்தின் ஆற்றல் 1000GeV-யிலிருந்து (வெப்பம் ஒரு வகையான ஆற்றல்) குறையும் போது சமச்சீர்மை முறிவு ஏற்படுகிறது. இவ்வாறு திடீரென ஏற்பட்ட சமச்சீர்மை முறிவினால் ஒரு புலம் அங்கு தோன்றுகிறது. இந்தப் புலத்திற்கு ஹிக்ஸ் புலம் (Higgs Field)  என்று பெயர். இந்தப்புலத்தினுள் 4 புலமாறா போசான்களான W-,W+, Z0  மற்றும் ஒளியனாகிய ஃபோட்டான்கள் இவை அலைந்துத் திரி கின்றன. ஒளியனைத் தவிர்த்த மற்ற இரண்டு மீதும் அந்தப் புலத்தினுள் அலையும் போது ஒரு இழுவிசை உணரப்படுகின்றது. அந்த இழுவிசைதான். அதனால் நிறைகளைப் பெற்றுக்கொள்ள காரணமாகின்றன.

ஒளியனும் நியூட்ரினோக்களும் (Neutrino)  அதிகமாக யாரிடமும் ஒட்டு வைத்துக்கொள்வது கிடையாது. ஆகவே அவை இழுவிசையை உணர்வ தில்லை, அவற்றிற்கு நிறை கிடையாது. ஆனால் மற்ற புலமாறா போசான்கள் நெருக்கமாக உறவாடக் கூடியவை; அதனால் உணரப்படும் இழுவிசை அதிகம்; எனவே நிறையும் அதிகம். இந்த இழு விசைக்குக் காரணமான துகளே ஹிக்ஸ் போசான் துகள் என பீட்டர் ஹிக்ஸ் தனது கோட்பாட்டின் மூலம் 1964- இல் உறுதிப்படுத்தினார். இது உண்மை தான் என ஹிக்ஸ் போசான் துகள் உள்ளதை உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  

1964-ல் பீட்டர் ஹிக்ஸ் உட்பட மொத்தம் 6  விஞ்ஞானிகள் போசான் துகள்களுக்கு நிறையைத் தரும் ஒரு துகள் இருக்கவேண்டும் என்று கணித்த நாள் முதல் அதற்கான தேடுதல் வேட்டையும் அறிவியலாளர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடிக்க அதிகமாக செலவு செய்ய வேண்டி யிருந்ததால் அமெரிக்காவில் ஃபெர்மி ஆராய்ச்சி நிறுவனமும் (Fermilab)  ஐரோப்பிய ஒன்றியத்தில் செர்ன்(CERN- European Organisation For Nuclear Research)  மட்டும் இந்தத் தேடுதல் வேட்டையில் இறங்கின. ஒரு கட்டத்தில் அமெரிக்க அரசு இந்த ஆராய்ச்சிக்கு நிதி உதவி செய்ய முடியாது என்றவுடன், CERN–ல் முழுமூச்சாக வேலை நடந்தது. இதில் கிட்டத்தட்ட 100 நாடுகளைச் சேர்ந்த 6,000-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்தனர்.

துகள் முடுக்கி  (Particle Collider)  என்பது, செயற்கை தனிம மாற்றத்தை உருவாக்க பயன்படுகிற,  மின்னூட்டத் துகள்களை முடுக்கப் பயன்படும் அமைப்பு ஆகும். எனவே, துகள் முடுக்கி என்பது உயர் ஆற்றல் துகள் இயற்பியலின்  (High Energy Particle Physics)  அடிப்படைக் கருவியாகும். இக் கருவியில் அணுக்கருவின் கதிர்வீச்சுகள் வாயுக்களின் வழியே செல்லும்போது வாயுக்களை அயனி யாக்கம் செய்கின்றன. அயனியாக்கும் கதிர்வீச்சுகள் உயர் மின்னழுத்த வேறுபாட்டால், மிக அதிக ஆற்றலுடன் முடுக்கப்பட்டு துகள்களை கண்டுபிடிக்க உதவுகின்றன.

செர்னின் பெரிய ஹாட்ரான் மோதுவி (Large Hadron Collider-LHC) உலகின் அதிக சக்தி வாய்ந்த துகள் முடுக்கி ஆகும். இந்த மோதுவி வளையம் (Collider Ring)  பிரான்சுக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையில் 27 கி.மீ. சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெரிய ஹாட்ரான் மோதுவியை பூமிக்குள்ளே 100 மீட்டர் ஆழத்தில் அமைத் திருக்கின்றனர். பல ஆயிரம் காந்த விசைகொண்ட காந்தங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனுள் புரோட்டானை அதிக ஆற்றலுடன் மோதவிடப்பட்டது. இதற்காக ALICE, ATLAS, CMC, LHCb  ஆகிய கருவிகள் பயன்படுத்தப்பட்டன. எப்படி காற்றில் இருக்கும் அணுக்கள் நம் கண்களுக்குப் புலப்படாதோ அதுபோல இந்தத் துகள்களும் புலப்படாதவை. அவற்றை கண்டறிய ATLAS மற்றும் CMS ஆகிய இரு கருவிகளையும் அருகருகே அமைத்தனர். இவை முறையே 7000 மற்றும் 12500 டன்கள் எடை கொண்டவை. இது வரைக்கும் கிட்டத்தட்ட இருபதாயிரம் கோடி ரூபாய்களை செலவழித்த பின்பு தான் இந்தத் துகளைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டோம் என செர்ன் 2012 ஜூலை 4-ஆம் தேதி பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்சுவா எங்கிலேர்ட் முன்னிலையில் உலகத்திற்கு அறிவித்தது.

துகள் கோட்பாட்டின்படி பிரபஞ்ச வரலாறு திட்டவட்டத் துகள் கோட்பாட்டின் உதவியோடு பிரபஞ்சம் தோன்றிய விதம் குறித்து ஒரு கொள்கை இருக்கிறது. இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அநேக ஆராய்ச்சிகளின் முடிவுகள் அதற்குச்  சாதகமாயிருக்கின்றன. அந்தக் கொள்கையின்படி, பிரபஞ்சம் ஒரு சிறு புள்ளியளவில் பொதிந்திருந்தது பெரிய ஆற்றலாக வெடித்துச் சிதறியதன்  விளைவாகவே உருவாகியிருக்க வேண்டும். அந்தச் சிறிய அளவிலான அதி உச்ச ஆற்றல் எங்கிருந்து வந்தது? என்ற கேள்விகளுக்கெல்லாம் அறிவியலிலில்  இப்போதைக்குப் பதில் இல்லை.

ஏனெனில் அது கணிதத்திற்கு பொருந்தாத அருநிலை கொண்ட ஒரு ஒற்றைப்புள்ளி (singularity).. அந்தப்  பெரு வெடிப்பில் இருந்தே நாம் காணும் (காணக் கூடியது. 4 விழுக்காடு மற்றும் காணக்கூடாதது 96 விழுக்காடு அனைத்தும், காலம் (time) மற்றும் இடம்  (வெளி;space) உட்பட, உருவாகியிருக்கின்றன. ஐன்ஸ்டீனின் பிரபலமான கோட்பாட்டின்படி (E=MC2)  ஆற்றல்தான் நிறை (mass), நிறைதான் ஆற்றல்  (Energy)  ஆகும். அதன்படி ஆரம்பத்தில் இருந்த பெரிய ஆற்றல் சிறு சிறு துகள்களாக மாறிவிட்டது. அப்படி உண்டானவைதான் ஆறு வகையான குவார்க்குகள், ஆறு வகையான லெப்டான்கள் மற்றும் புலம் மாறா போசான்கள். இவை உருவான பொழுதிலேயே அநேக துகள்கள் எதிர்த் துகள்களுடன்(anti#particle)  சேர்ந்து ஒளியாக மாறிவிட்டன. இப்பொழுது பெரு வெடிப்பு நடந்து கண்சிமிட்டும் நேரத்தில் நூறில் ஒரு பங்காக (10#35) இந்த பிரபஞ்சத்தின் வயது இருந்தது. அப்பொழுது பிரபஞ்சத்தின் வெப்பம் 10280 ஈ வெப்பநிலையிருந்தது. நேரம் ஆக ஆக பிரபஞ்சத்தின் வெப்பம் குறைந்து கொண்டே வருகிறது, மட்டும் அல்லாமல் பிரபஞ்சத்தின் அளவும் விரிந்துகொண்டே வருகிறது. இந்த நேரத்தில் அப்போதைக்கு மீதமிருந்த துகள் களில் குவார்க்குகள் பல தினுசாக சேர்ந்து புரோட்டான்களாகவும் நியூட்ரான் களாகவும் மாறிவிட்டன. ஆறு வகையான குவார்க்குகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் மேல்நோக்கி (Up Quark) மற்றும் கீழ்நோக்கி குவார்க்குகள் (Down Quark)  என்று இரண்டு வகை இருக்கின்றன. ஒரு புரோட்டானில் 2 மேல் நோக்கி குவார்க்குகளும் 1 கீழ்நோக்கி (d)  குவார்க்கும் சேர்ந்திருக்கும்.  அதேபோல நியூட்ரானில் 2 கீழ்நோக்கி (d)  குவார்க்குகளும் 1 மேல்நோக்கி (u) குவார்க்கும் சேர்ந்திருக்கும். இப்பொழுது அண்டம் முழுதும் புரோட்டான்களாலும் நியூட்ரான் களாலும் எலக்ட்ரான்களாலும் நியூட்ரினோக்களாலும் (இந்த கடைசி இரண்டும் லெப்டான்கள் எனப்படும்) ஒளியாலும் நிறைந்திருந்தன; தனியாக ஒரு குவார்க்கும் அதன்பிறகு கிடையாது. இப்போதைக்கு பிரபஞ்சத்தின் வெப்பம் நூறு கோடி செல்சியஸ்,  மேலும் அதன் வயது 3 நிமிடங்கள். இந்த வெப்பத்தில் புரோட்டான்களும் நியூட்ரான்களும் பிணைந்து சிறிய அணுக்கருக்கள் உருவாக ஆரம்பித்தன. அண்டத்தின் வயது 300 ஆயிரம்  ஆனதற்குப் பின்பே அண்டத்தில் உருவாகியிருந்த அணுக்கருக்களுடன் லெப்டான்களின் ஒரு வகையான எலக்ட்ரான் சேர்ந்து அணுக்கள் உருவாயின; அப்போது அண்டத்தின் வெப்பம் கிட்டத்தட்ட ஆயிரம் டிகிரி செல்சியஸ். அணுக்கள் மூலக்கூறுகளாகவும், வாயுவாகவும்,  நீராகவும், திடப்பொருள்களாகவும் மாறி அதில் ஒரு சிறு பங்கில் மனிதன் வாழ்வதற்கேற்ற பூமியாகவும் ஆகியிருக்கிறது.

ஹிக்ஸ் போசானைக் கண்டுபிடித்துவிட்டது நிரூபணமாகியிருப்பதனால், இனி விசைகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றம் இருக்கும். அப்பொழுது மின்காந்த விசை, மெல்விசை மற்றும் வல்விசை ஆகியவற்றை இணைத்து பிரமாண்ட ஒன்றிணைவு கொள்கை (Unified theory) உறுதிப்படும். ஆனால் அதற்குத் தேவையான ஆற்றலை எப்படி எடுக்கப் போகிறோம் என்பதுதான் பெரிய கேள்வி. ஏனெனில் இப்பொழுது நாம் அடைந்திருக்கிற 7-பங்ய ஆற்றலை எடுக்கவே அமெரிக்கா போன்ற நாடுகளால் இயலவில்லை. இந்த ஹிக்ஸ் போசானைக் கண்டுபிடிக்கச் செய்த செலவையே மக்கள் பொருளாதார நெருக்கடியில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இது தேவையா? என்று கேட்பவர்கள் நிறையபேர். ஆகவே இன்னும் ஆயிரம் மடங்கு அதிகமான ஆற்றல் கிடைப்பது அரிதுதான். அல்லது அடுத்த பிரபஞ்சம் உருவாக வேண்டும், அப்பொழுது நம் விஞ்ஞானிகள் இந்தக் கருவிகளோடு அங்கு இருக்கவேண்டும்!

Comments