தமிழ் இலக்கணம் | சொற்கள்


சொற்கள்:
•    சொற்கள் நான்கு வகைப்படும் ; இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
•    மற்றவர்களுக்கும் பொருள் புரியும் சொல் இயற்சொல் எனப்படும் எ.டு. தீ, காடு, மரம்.
•    பெயர் இயற்சொல், வினை இயற்சொல் என இயற்சொல் இரண்டு வகைப்படும்.
•    காற்று, நிலவு, ஞாயிறு, பலகை - பெயர் இயற்சொற்கள்
•    படித்தான், தூங்கினான், வந்தான் - வினை இயற்சொற்கள்
•    பொருள் தெரியாத ஆனால், கற்றவர்களுக்கு மட்டுமே புரியும் சொற்கள் - திரி சொல் எனப்படும்.
•    பீலி, உகிர், ஆழி - திரி சொல்லிற்கான எடுத்துக்காட்டுகள். (பீலி -மயில் தோகை, உகிர் - நகம், ஆழி - கடல், சக்கரம்).
•    பெயர் திரிசொல், வினைத் திரிசொல் என திரிசொல் இரண்டு வகைப்படும்.
•    எயிறு, வேய், மடி, நல்குரவு - பெயர்த் திரிசொல் (எயிறு - பல், வேய் - மூங்கில், மடி - சோம்பல், நல்குரவு - வறுமை).
•    வினவினான், விளித்தான், நோக்கினார் - வினை திரிசொல் (வினவினான் - கேட்டான், விளித்தான் - அழைத்தான், நோக்கினார் - பார்த்தார்).
•   தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள பிறபகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொற்கள் திசைச் சொற்கள் எனப்படும். எடுத்துக்காட்டு; கேணி, பெற்றம் (கேணி - கிணறு, பெற்றம் -பசு).
தொகை நிலைத்தொடர்கள்:
•    வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என தொகை நிலைத்தொடர்கள் ஆறு வகைப்படும்.
•    பெயர்ப்பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்புக்கு வேற்றுமை உருபு எனப்பெயர்.
•    வேற்றுமைகள் எட்டு வகைப்படும். இதில் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபு இல்லை. மற்ற ஆறுக்கும் உருபுகள் உண்டு. அவை ஐ,ஆல், கு, இன், அது, கண்.
•    இரு சொற்களுக்கிடையே இவ்வேற்றுமை உருபு மறைந்து வருவதை வேற்றுமைத் தொகை என்கிறோம்.
•    எடுத்துக்காட்டுகள்: பால் பருகினான் - இரண்டாம் வேற்றுமைத்தொகை (பால் +ஐ+ பருகினான்  - இங்கு ஐ என்னும் உருபு மறைந்துள்ளது).
•    தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை (தலை +ஆல்+ வணங்கினான்).
•    வேலன் மகன் - நான்காம் வேற்றுமைத் தொகை  (வேலன் +கு+மகன்).

தொகா நிலைத்தொடர்கள்:
•  எழுவாய்த்தொடர், விளித்தொடர், வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், வேற்றுமை தொகாநிலைத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் என தொகா நிலைத்தொடர்கள் ஒன்பது வகைப்படும்.
•    கபிலன் வந்தான் - இதில் கபிலன் என்னும் எழுவாயைத் தொடர்ந்து வந்தான் என்னும் பயனிலை வந்துள்ளதால், இது எழுவாய்த்தொடர்.
•    கதிரவா வா - இது விளித்தொடர்
•    கண்டேன் சீதையை - வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத் தொடர்.
•    விழுந்த மரம் - விழுந்த என்னும் எச்சவினை மரம் என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதால் இது பெயரெச்சத் தொடர்.
•    வந்து போனான் - வந்து என்னும் எச்சவினை போனான் என்னும் வினைமுற்றைக்கொண்டு முடிந்துள்ளதால், இது வினையெச்சத் தொடர்.
•    வீட்டைக் கட்டினான் - இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்துள்ளதால், இது வேற்றுமைத் தொகா நிலைத்தொடர் எனப்படும்.
•    மற்றொன்று - மற்று + ஒன்று. மற்று என்னும் இடைச்சொல்லை அடுத்து ஒன்று என்னும் சொல் தொடர்ந்து வந்ததால் அது இடைச்சொற்றொடர் எனப்படும்.
•    மாமுனிவர் - இத்தொடரில் மா என்பது உரிச்சொல். இதைத் தொடர்ந்து முனிவர் என்னும் சொல் வந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர்.
•    வாழ்க வாழ்க வாழ்க - ஒரே சொல் இங்கு பலமுறை அடுக்கி வந்துள்ளதால் இது அடுக்குத்தொடர்.

இரண்டாம் வேற்றுமை உருபு
•    இதனை செயப்படுபொருள் வேற்றுமை எனவும் வழங்குவர்.
•    ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய அறுவகைப் பொருள்களில் வரும்.
•    வளவன் பள்ளியைக் கட்டினான் - ஆக்கல்
•    சோழன் பகைவரை அழித்தான் - அழித்தல்
•    தேன்மொழி கோயிலை அடைந்தாள் - அடைதல்
•    குழகன் சினத்தை விடுத்தான் - நீத்தல்
•    கயல்விழி குயிலைப் போன்றவள் - ஒத்தல்
•    கண்ணன் செல்வத்தை உடையவன் - உடைமை

மூன்றாம் வேற்றுமை உருபுகள்
•    ஆல், ஆன், ஒடு, ஓடு என பல பொருள்களில் இது வரும்
•    ஆல், ஆன் உருப்புகள் கருவி கருத்தா ஆகிய இருபொருள்களிலும் வரும். கருவி முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.
•    நாரால் கயிறு திரித்தான் (முதற் கருவி காரியமாக மாறி அதுவாகவே இருப்பது) கையால் கயிறு திரித்தான்.
•    துணைக்கருவி (காரியம் செயல்படும்வரை துணையாக இருப்பது) இதேபோல் கருத்தாவும் இயற்றுதல், கருத்தா, ஏவுதல் கருத்தா என இருவகைப்படும்.
•    கோயில் அரசனால் கட்டப்பட்டது என்பது ஏவுதல் கருத்தா (தான் செய்யாமல் பிறரைச் செய்ய வைப்பது).

நான்காம் வேற்றுமை உருபுகள்
•    கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை எனப் பல பொருள்களில் வரும்.
•    புலவர்க்குப் பரிசு கொடுத்தார் - கொடை
•    நோய்க்குப் பகை மருந்து - பகை
•    பாரிக்கு நண்பர் கபிலர் - நட்பு
•    வீட்டுக்கு ஒரு பிள்ளை - தகுதி
•    வளையலுக்குப் பொன் - அதுவாதல்
•    கூலிக்கு வேலை - பொருட்டு
•    அனிதாவுக்கு மகன் அன்பரசு - முறை
•    திருத்தணிக்கு வடக்கு வேங்கடம் - எல்லை

ஐந்தாம் வேற்றுமை உருபு
•    இல், இன், இவை தம்மை ஏற்ற பெயர்ப்பொருளை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏதுப் பொருள்களாக வேறுபடுத்தும்.
•    தலையின் இழந்த மயிர் - நீங்கல்
•    பாலின் நிறம் கொக்கு - ஒப்பு
•    சென்னையில் மேற்கு வேலூர் - எல்லை
•    அறிவில் மிக்கவர் ஔவை - ஏது
•    இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பன ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் ஆகும்.
•    வேலன் ஊரிலிருந்து வந்தான் - இருந்து
•    கயல்விழி என்னைவிடப் பெரியவள் - விட
•    தமிழைக்காட்டிலும் சுவையான மொழி உண்டா? - காட்டிலும்

ஆறாம் வேற்றுமை உருபு:
•    அது, ஆது என்பன ஒருமைக்கும், அ என்பது பன்மைக்கும் வரும். இவ்வுருபுகள் கிழமைப் (உரிமை) பொருளில் வரும்.
•    எடுத்துக்காட்டுகள்: எனது வீடு, எனது நூல், தை, மாசி எனத் தமிழ் மாதங்கள் பன்னிரெண்டு.
•    ஆறாம் வேற்றுமைக்கு உடைய என்பது சொல்லுருபாக வரும்.
•    எடுத்துக்காட்டுகள்: என்னுடைய வீடு, நண்பனுடைய சட்டை.

ஏழாம் வேற்றுமை உருபுகள்:
•    கண், கால், மேல், கீழே, இடம், இல்.
•    மணியில் ஒலி - இல்
•    வீட்டின்கண் பூனை - கண்
•    அவனுக்கு என் மேல் வெறுப்பு - மேல்
•    பெட்டியில் பணம் உள்ளது - இல்

எட்டாம் வேற்றுமை உருபு:
•    விளிவேற்றுமை என்பது எட்டாம் வேற்றுமை எனப்படும்.
•    படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது. இதனை விளி வேற்றுமை என வழங்குவர். எடுத்துக்காட்டு; கண்ணா வா!, கிளியே பேசு!

No comments:

Post a Comment